
புஷ்பவனம் குப்புசாமி, அவரது மனைவி அனிதா அவர்களின் நாட்டுப்புறப் பாடல்கள். மிக நன்றாக இருந்தது. இது பற்றி விளக்கமாகப் பின்னர் எழுதுகிறேன். குறிப்பிட்டுச் சொல்வதென்றால் புஷ்பவனம் பாடிய 'காலம் மாறிப்போச்சு' என்னும் நகைச்சுவைப் பாடல். கலக்கி விட்டார் மனுஷன்.
சீனியர் அமைச்சர் பொன்னையன், மற்றும் அவைத்தலைவர் காளிமுத்து, மற்றும் பல பெயர், முகம் தெரியாத அமைச்சர்கள் வந்திருந்தனர்.
ஒன்பது பாடல்கள் பாடிய பின்னர், பத்தாவதாக ஒன்று ஆரம்பிக்க இடை மறித்த அமைச்சர் பெருமக்கள், நீண்ட நன்றியுரைக்குப் பின்னர் ஆளுக்கொரு பொன்னாடையை ஆளுக்கொன்றாகப் போர்த்தினர். மீண்டும் பத்தாவது பாடல் தொடங்க, மணியும் 21.30 ஆனது, உணவு பரிமாறல் தொடங்கியது. அனைவரும் பந்திக்குப் போனாலும் பாடல் தொடர்ந்தது. நேரம் நிறைய ஆனதாலும், மறுநாள் கருத்தரங்குக்குச் செல்ல வேண்டிய காரணத்தாலும் நான் கிளம்பி வர வேண்டியதயிற்று.
பொன்விழி OCR மென்பொருளை உருவாக்கிய பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்துப் பேசினேன். நாளை அவர் OCR - எழுத்து உணரியை உருவாக்குவதில் உள்ள கடினங்களைப் பற்றிப் பேசுகிறார்.
"தமிழ் எழுத்துச் சீர்மை" பற்றிய கருத்தரங்கு. தலைமை தாங்குவது திரு சுந்தரமூர்த்தி. பேசப்போவது திரு குழந்தைசாமி, சின்னத்துரை ஸ்ரீவாஸ் (அவர் வரவில்லை. பேசப்போவது மற்றொருவர்) மற்றும் திரு லோகசுந்தரம்.
மணி மணிவண்ணன் தலைமையில் இந்தக் கருத்தரங்கு தொடங்கியது. மணிவண்ணனின் துவக்க உரைக்குப் பின் முதல் உரை திரு வா.மு.சே ஆண்டவர் 'ஆய்வு நோக்கில் கணினி உதவியுடன் அகராதி' என்பது பற்றிப் பேசினார். கிட்டத்தட்ட எழுதிக் கொண்டு வந்ததை அப்படியே பேசிமுடித்தார். 1968க்குப் பிறகு கலைக் களஞ்சியம் மாற்றப்படவே இல்லை என்று சொன்னார். கணினி, இணையம் உதவியோடு அகராதி செய்ய வேண்டும் என்று சொன்னார். எப்படி, யார் செய்யப்போவது என்பதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.




