Saturday, August 23, 2003

திசைகள் - குறுந்தகட்டில்

சொல்ல மறந்து விட்டேனே. மாலன் குறுந்தகட்டில் திசைகள் மின்னிதழின் முதல் ஐந்து பதிப்புகள் (மார்ச் 2003 முதல் ஜூலை 2003 வரை) பதித்தது கொடுத்தார்.

முத்து நெடுமாறனும் முதல் நாள் சந்தித்த போது எவ்வாறு ஜப்பான், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கொண்டு இணையத்தின் மூலமாகவே இந்தக் குறுந்தகட்டினைத் தயாரித்தனர் என்றும் விளக்கினார்.

சிறு இலக்கிய, சமுதாய இதழ்கள் இணையத்தையும், குறுந்தகட்டையும் நன்கு பயன்படுத்த வேண்டும். திசைகள் அதற்கு முன்னோடி. ஆ, இன்று (தாளில் அச்சிட்ட) சொல்புதிது இதழும் தபாலில் வந்துள்ளது...

பொதுமக்களுக்கோர் நற்செய்தி

தமிழ் இணையம் 2003 கருத்தரங்கிற்கு அனுப்பப்பட்ட கட்டுரைகள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு புத்தகமும், அதன் கூட ஒரு குறுந்தகடும் வெளியிடப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

அந்தக் கட்டுரைகள் அனைத்தும் - அய்யகோ - ஒரே கோப்பாக, 10MB ஆக வெளியிடப்பட்டுள்ளது. ஆயினும், உங்களுக்காக அதனை இங்கு வைத்துள்ளேன். நினைவில் இருக்கட்டும், இது PDF கோப்பு, 10MB அளவானது. ஒரு சில பிழைகள் திருத்தப்பட்டு அவையும் இங்கு உள்ளன.

முனைவர்கள் கல்யாணசுந்தரமும், கிருஷ்ணமூர்த்தியும் தொகுத்துள்ளனர். கல்யாண் விரைவில் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு தனி PDF கோப்பாக INFITT (உத்தமம்) இணைய தளத்தில் இடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பமும் பயன்பாடும்

கணினிவழிக் கல்வியில் நேரத்தைச் செலவிட்டதால் இதன் கடைசிப் பகுதிக்குத்தான் வர முடிந்தது. முதலில் உப்புச் சப்பில்லாத 'Tamil Chatterbox' என்னும் தலைப்பில் பேசிக் கொண்டிருந்ததால் அதனை விடுத்து அடுத்த அறையினுள் நுழைந்தேன். திரும்பி வருகையில் 'ஸ்வரம்' (swaram) என்னும் தமிழ் programming language பற்றிய பேச்சு முடிந்திருந்தது. பின்னர் பேசிய கணேஷ் குமார் என்பவர் டி.கல்லுப்பட்டி, மதுரை கிராமத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்து வந்து அருமையாகப் பேசியதற்காகவே அவருக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும்.

கணேஷ் குமார் 'python' என்னும் open source மொழியைத் தமிழில் செய்துள்ளார். 'pytham' என்று பெயர் வைத்துள்ளார். பித்தம் என்று படித்தால் நன்றாக இல்லை! எனக்கு அவ்வளவாகப் புரியாத விஷயம். இது பற்றிய விவாதம் ஒன்று tamilinix குழுவில் நடைபெற்றது.

மொத்தத்தில், கணேஷ் குமார் செய்ததன் உட்காரணம் வெகு நல்லது. தமிழ் கிராமங்களில் உள்ள மாணவர்கள் தமிழறிவு தவிர வேறு ஏதும் இல்லாதவர்கள் தமிழில் எழுதக்கூடிய வகையில் ஒரு கணினிமொழி இருந்தால் லாஜிக்கைக் கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும், அதன் பிறகு அவர்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பது கணேஷ் குமாரின் வாதம். பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பர் மனோஜ் (சென்னை கவிகள்) இதை ஆமோதித்தார். விஷயம் தெரிந்தவர், மென்பொருள் எழுதுபவர், எனவே அவர் சொன்னால் சரிதான். பின்னர் மணிவண்ணனும் இதை வெகுவாக ஆமோதித்தார்.

ஸ்வரம்... கேள்வி பதிலில் சற்றும் அலுங்காது தனது மென்பொருள் compiler ஜாவா virtual machine ஐ விட சிறந்தது என்பது மாதிரி பேசினார். ஜாவா மாதிரியே இது எழுதியுள்ள புரோகிராமை பைட் கோடுக்கு மாற்றி, தன் வர்ச்சுவல் மெசினுள் இயங்க வைக்கிறதாம். ஆனால் சன் மைக்ரோசிஸ்டம் எத்தனை பொறியியலாளர்களை வேலைக்கு வைத்து மென்பொருள் உருவாக்குகிறது?

இந்த கோடுகளையெல்லாம் மற்ற கணினி அறிஞர் பார்வைக்கு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இது எத்தனை சிறந்தது, பயன்படக் கூடியதா என்பது தெரிய வரும். கொடுத்திருக்கும் குறுந்தகட்டில் இது ஏதும் இல்லையென்று தோன்றுகிறது.

மாநாட்டில் சந்தித்தவர்கள்

முனைவர் சந்திரபோஸ், கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் (இணையத்தின் ஆசிப் மீரான் இவரது மகன்), நாக இளங்கோவன் ஆகியோர் கண்ணில் மாட்டியவர்கள்.

இணைய வழித் தமிழ்க் கல்வி - இலக்கப்பாடி - digital village

subaசுபாஷினி கனகசுந்தரம் தனது 'இலக்கப்பாடி' என்னும் திட்டத்தைப் பற்றி விரிவாகப் பேசினார். கணினிக் கல்வியைக் குறிப்பிடுகையில் அதைத் தான் மூன்றாகப் பார்ப்பதாகச் சொன்னார்:
* கணினி வழிப் (பிற) கல்வி (வரலாறு, இயல்பியல், வேதியியல், புவியியல் போன்றவை)
* கணினிக் கல்வி (கணினி பற்றிய கல்வி)
* கணினி வழி மொழிக் கல்வி (கணினி மூலம் தமிழைப் பயிற்றுவிப்பது)

மேலை நாடுகளில் செய்வதை விட ஆசிய நாடுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை நாம் இந்தியாவில், தமிழகத்தில் செயல்படுத்துவது எளிதாயிருக்கும் என்றார். வரலாற்றைச் சொல்லிக் கொடுக்கையில் மற்ற பலவற்றையும் கூட சேர்த்து சொல்லிக் கொடுப்பது (இராஜராஜ சோழன் காலத்தைப் பற்றிப் பேசுகையில் அந்த காலத் தமிழ் மொழி, புவியியல் என்று மற்றவற்றையும்) கற்பவரை விரைவாக முழுமையாக்கும் என்றார். கல்வி என்பது
- தனி மனிதத் திறனை வளர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும்
- சுயமாக சிந்திக்கும் சமுதாயம் உருவாக்க வேண்டும்
- பொது மக்களைப் பள்ளிக்கூடங்களில் ஈடுபாடு கொள்ள வைக்க வேண்டும்
என்றார். பாடத்திட்டம், கல்வி முறை, தேர்வு முறை, கற்றல் கருவிகள் மாற வேண்டும் என்று சற்று புரட்சிகரமான கருத்துகளைப் பற்றிப் பேசினார். கல்வி கற்பிக்கையில் பத்து வயதுக் குழந்தைகளுக்கு ரோபாடிக்ஸ் போன்ற இயந்திரவியல், பொறியியல் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது பற்றி திசைகள் இதழிலும் எழுதியுள்ளார். தனது இணைய தளத்தில் ரோபோடிக்ஸ் பற்றிய பாடங்கள், செயல்முறை விளக்கங்கள் எல்லாம் தமிழிலேயே கொடுத்திருப்பதாகவும் சொன்னார்.

குறிப்பாகத் தமிழகத்தில் எவ்வாறு இலக்கப்பாடிகளை அமைப்பது என்று ஒரு வழி சொன்னார். முதலில் ஒரு ஊரில் இரண்டு பள்ளி வீதம் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு கணினி server, மற்றும் கணினி அறை அமைத்து, இதனை மற்ற பள்ளிகளில் இருக்கும் கணினிகளோடு இணைத்து ஒரு வலையத்தை உருவாக்க வேண்டும், பின்னர் இந்த அமைப்பினை விஸ்தாரப்படுத்திக் கொண்டே போகலாம் என்றார். இதில் உள்ள பிரச்சினைகளையும் எடுத்துச் சொன்னார் - பொருளாதாரம், திட்ட உருவாக்கம், தொழில்நுட்ப வசதிகள், தகுதியான ஆசிரியர்கள் ஆகிய இந்தப் பிரச்சினைகளுகுத் தீர்வு காணுதல் அவசியம்.

இணைய வழித் தமிழ்க் கல்வி

siva pillaiமுதலில் பேசிய திரு சிவப் பிள்ளை, லண்டன் கோல்டுஸ்மித்ஸ் காலேஜ், எப்படி சிறாருக்கு கணினி வழியே தமிழைப் பாடமாகக் கற்பிப்பது என்பது பற்றி மிக அருமையாக ராக்கெட் வேகத்தில் பொழிந்து தள்ளினார். தன் நகைச்சுவையால் அவையோரை அவ்வப்பொழுது சிரிக்கவும் வைத்துக் கொண்டிருந்தார். பிரித்தனில் பல மொழிகளுக்குத் தனக்கென பாடத்திட்டம் இருப்பதாகவும், தமிழுக்கு மட்டும் இல்லையென்றும், அதனால் தானே ஒரு பாடத்திட்டம் தயாரித்து வழங்கியிருப்பதாகவும், அதற்கு அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை என்றும் சொன்னார்.

நிச்சயமாக அனுமதி கிடைக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். தாய்மொழி என்பதற்கு நல்ல விளக்கமும் அளித்தார். தாய்மொழி என்பது தாயின் மொழி அல்ல; வீட்டில் பரவலாகப் பேசப்படும் மொழியே என்றார். ஜெருமனியில், ஃபிரான்ஸில் உள்ள தமிழர்கள் (முக்கால்வாசி புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள்) ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு தெரியாத காரணத்தால் வீட்டில் தமிழிலே பேசுவதால் தமிழ் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் பிரித்தனில் உள்ள தமிழர்கள் நுனிநாக்கு ஆங்கிலம் பேசுவதால் தன்னிடம் பாடம் படிக்கும் குழந்தைகள் தமிழை வீட்டிலே பேசுவதில்லை என்றும் குறை பட்டுக் கொண்டார். ஓரத்தில் அமர்ந்திருந்த இராம.கி ஐயா சென்னையிலும் இதே கதைதான் என்று சற்று உரக்கவே சொன்னது அவையில் உள்ள அனைவர் காதிலும் விழுந்திருக்கலாம்.

அவைத்தலைவர் கொடுமுடி சன்முகம் (எழுத்துச் சீர்மை பற்றி புத்தகம் எழுதியிருக்கிறாராம்), இதைப் பற்றிப் பேசுகையில் காட்டான்குளத்தூராக இருந்தாலும் நம்மூரில் முதல் மொழி ஆங்கிலமாக உள்ளது, தமிழ் இரண்டாம் பட்சம்தான் என்றார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன் சற்றே வீராவேசமாக அதை இடைமறிக்க, ஐயா சன்முகம் சடாரென்று பின்வாங்கி மேலே ஏதும் தகராறில் போய் முடியாதவாறு காத்தார்.

தொழில் நுட்பமும் பயன்பாடும்

navanithanகோவை பி.எஸ்.ஜி கல்லூரிப் பேராசிரியர் பி.நவநீதன், தனது மாணவர்களோடு இரண்டு கட்டுரைகளை வழங்கினார். 'பண்டிதம்' என்னும் கட்டமைப்பு (framework) மூலம் பலமொழிகளை ஒரே படிவத்தில், கோப்பில் கொடுப்பது, பின்னர் அந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி பல்வேறு மென்பொருட்களை உருவாக்குவது என்பது இவர்களது வழி. இந்தப் பண்டிதம் என்னும் கட்டுக்கோப்பு தனக்கென ஒரு எழுத்துக் குறியீட்டினைப் பயன்படுத்துகிறது. இதுவே இவர்களுக்கு இடையூறாக வரலாம்.

மின்புறா என்னும் பல்மொழி அஞ்சல் அனுப்பி மற்றும் நிர்வகிக்கும் செயலி; திரவியம் எனும் விற்பனை நிர்வகிக்கும் செயலி ஆகிய இரண்டு செயலிகளைப் பற்றிப் பேசியும், செயல்பாட்டு முறையிலும் காண்பித்தனர்.

இரண்டும் திறம்பட செய்யப்பட்டிருந்தது. இதில் மின்னஞ்சல் முறையில் கடுமையான எதிர்ப்பு இருக்கலாம். இதைப் பயன்படுத்த எல்லோருடைய மின் அஞ்சல் செயலிகளும் பண்டிதம் கட்டுக்கோப்பில் இருக வேண்டும். இந்த மாற்றம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படாது. இன்னும் ஒரு எழுத்துக் குறியீட்டை ஏற்றுக் கொள்வதிலேயே ஒருமனது ஆகவில்லை.

திரவியம் - தனியாகச் செயல்படக் கூடியது. அதனால் தேவை வேண்டி தமிழகக் கடைகள் இதனை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொழில் நுட்பமும் பயன்பாடும்

maniamதலைமை வகித்தவர் முனைவர் 'பொன்விழி' கிருஷ்ணமூர்த்தி. மொத்தம் நான்கு கட்டுரைகள் அளிக்கப்பட்டது. சிங்கை மணியம் இணைய முகவரிகளை ஆங்கிலம் விடுத்து பல்மொழியாக்கல் பற்றிப் பேசினார். இணையம் நாளாக, நாளாக ஆங்கிலம் அல்லாதோர் புழக்கம் அதிகரித்தலாலும், கொரியா, சீனா போன்ற நாடுகளில் வலையுலாவி அந்தந்த மொழிகளிலேயே உள்ளதாலும் இணைய தள முகவரி மட்டும் ஆங்கிலத்திலேயே இருப்பது கடினமானதால் அதை 1998 முதற்கொண்டே மணியம் வேலை பார்க்கும் நிறுவனம் அந்தந்த மொழிகளிலேயே தருகிறது என்பதைப் பற்றிப் பேசினார்.

இதன்படி .com, .org, .net என்பனவற்றை முறையே .வணி, .அமை, .வலை என்று வழங்கிச் செல்லலாம் என்று குறிப்பிட்டார். (.gov, .edu என்னவாகும்? .அரசு, .படி ? annauniv.edu என்பது அண்ணாபல்கலை.படி என்று ஆகும். vikatan.com என்பது விகடன்.வணி என்று ஆகும். நா.கணேசன் .படி க்குப் பதில் .கல்வி எனலாம் என்கிறார். நான் வினைச்சொல்லாக்கம் செய்ய நினைத்தேன். .அரசு க்குப் பதில் கூட .ஆள் என்றால் குழம்புமோ? எனினும் அறிஞர்கள் சொல்வதைச் செய்வது நலமே)

கொரியா, சீனா ஆகிய இடங்களில், 300,000க்கும் மேற்பட்ட தளங்கள் இந்த மாதிரி இயங்குகின்றன என்ற வியக்கும் செய்தினையும் சொன்னார்.

அடுத்துப் பேச வந்த அண்ணா பல்கலைக் கழக மாணவி தீபாதேவி தமிழில் ஒரு தேடல் தளம் அமைத்திருப்பதைப் பற்றிப் பேசினார். 'பவனி' என்று பெயரிட்டுள்ளனர். பல்வேறு தமிழ் எழுத்துக் குறியீடுகளை ஒரு குறிக்கு (தமிழக அரசின் tab) மாற்றி, ஊர்வான் (crawler) மூலம் தளங்களைத் தேடி அடுக்கிக் கொள்கின்றனர். பின்னர் தேடப்படும் சொல்லின் பகுதிகளைப் பிரித்து ஆதாரச் சொல்லினைத் தேடி அது வந்திருக்கும் தளங்களைத் தருகின்றனர்.

இந்தத் தொழில்நுட்பம் இந்திய நடுவண் அரசின் பண உதவியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மற்றும் முதல் நாள் சொல்லப்பட்ட தமிழ் இணைய அகராதி (25,000 சொற்கள் உள்ளன என்கிறார்கள்) ஆகியவை இன்னும் ஓரிரு மாதங்களில் பொதுமக்கள் பயனுக்கு இணையத்தில் போடப்படும் என்றும் சொல்கிறார்கள். ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

இணையவழித் தமிழ்க் கல்வி

முனைவர் இராஜபாண்டியன் இணையத் தமிழ்ப் பல்கலைக்கழகம் (Tamil Virtual University) இல் தமிழ்க் கல்வியை எவ்வாறு இணையம் வழியாக சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பது பற்றிப் பேசினார்.

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழகம் பாடத்திட்டத்தை நிர்வகித்து, தமிழ் இணையப் பல்கலைக் கழகம் மூலம் சொல்லிக் கொடுக்கிறார்கள். தேர்வுகள் இணையப் பல்கலைக் கழகம் மூலமாகச் செயல்படுத்தப் படுகிறது. பட்டம் அளிப்பது தமிழ்ப் பல்கலைக் கழகம்.

இவர்களது இணையத் தளம் ஒரு இணைய நூலகத்தை உள்ளடக்கி உள்ளது. இங்கு தொல்காப்பியம், அதற்கான உரை என்று ஆரம்பித்து, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்றெல்லாம் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. மற்றும் தற்கால இலக்க்கியங்கள், சிற்றிலக்கியம் போன்று பலவும் உள்ளிடப் பட்டுள்ளன.

மழலைக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையிலான பாடங்கள் வெறும் எழுத்துக்களாக மட்டுமில்லாமல் அசையும் படங்களாகவும் (animated pictures), ஒலி சேர்க்கப்பட்டும் மிகவும் தரமாக வழங்கப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் மாணவர்கள் இதில் சேர்ந்து படித்துத் தேர்வ்வும் எழுதலாம். பல நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் சேர்ந்து தேர்வுகளை நிர்ணயிக்க உள்ளூரிலேயே ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். 25% க்கான மதிப்பெண்களுக்கு இணையத்திலேயே விடை தேர்ந்தெடுக்கும் முறையில் (multiple choice) தேர்வு வழங்கப்படுகிறது. மீதம் 75%க்கும் தேர்வு வினாக்கள் இணையம் மூலமாகவே வினா வைப்பகம் மூலம் வழங்கப்படுகிறது. தேர்வு வழங்குபவர் அந்த நாள் காலையில் இணையம் மூலமாகத் தேர்வுத் தாளைக் கீழிறக்கி, அச்சிட்டு மாணவருக்கு வழங்கலாம்.

சந்தேகம் வந்தால் அந்தந்த பாட இயக்குனரிடம் இணையம் மூலமாகவே தொடர்பு கொள்ளலாம். பதில் எல்லா மாணவருக்கும் போய்ச் சேரும். இந்த முயற்சி மூலம் மழலையர் மொழிக் கல்வி, பயனர் கல்வி மற்றும் தமிழில் முனைவர் பட்டம் பெருமளவிற்கும் இணையம் மூலமாகவே முடியும் என்று செயல்படுகிறது தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.

பாராட்டுக்கள்.

ஒளிவகை எழுத்து உணரி (OCR) மற்றும் எழுத்திலிருந்து பேச்சு (TTS)

Ramakrishnanஅடுத்துப் பேசியது பேரா. ராமகிருஷ்ணன் - IISC பெங்களூர். இவர் ஒ.எ.உ க்கு மேல் ஒரு படி சென்று பார்வையற்றோருக்கான ஒரு படிப்பான் செய்வது பற்றிப் பேசினார்.

எழுத்துக்களை உணர்ந்தபின்னர், அடுத்து சீர்களாகப் பிரித்து அதை சரியாக உச்சரிக்கும் வகையை செய்வது பற்றிப் பேசினார். தன் மென்பொருளை open source முறைக்குக் கொண்டு வர இருப்பதாகவும், தமிழ் மொழி அறிவாளர்கள் செய்ய வேண்டிய வேலை அதிகம் இருக்கிறது என்றும் சொன்னார்.

ஒரு பெயர்ச்சொல் அகராதியும், அந்தச் சொற்களின் உச்சரிப்புக்கான தொகுப்பும் தேவை என்பதையும் வலியுறுத்தினார்.

நேற்றைய, மற்றும் இன்றைய இதுவரையிலான தொழில்நுட்பம் பற்றியவைகளைப் பார்க்கையில் நமக்குத் தேவை எனப்படுவது

- கணினித் தமிழ் அகராதி, இணையம் மூலம் தேடும் வசதி
- ஒளிவகை எழுத்து உணரியில் உள்ள இன்னும் ஒருசில கடினங்களைத் தவிர்த்தல்
- தேர்மையான சொல் திருத்தி
- தமிழ் மொழி உச்சரிப்பு விதிகள்
- பெயர்ச்சொற்களின் கணினி உச்சரிப்புத் தொகுதி

இவையனைத்தும் இருந்தால், நமக்குக் கிடைப்பது
* ஒளி வகை எழுத்து உணரி (OCR - optical character recognition)
* சொல் திருத்தி (Spell checker)
* எழுத்திலிருந்து பேச்சு (TTS - Text to Speech)

இதன் மூலம்
* அச்சுப் புத்தகத்திலிருக்கும் செல்வங்களைக் காக்க முடியும்.
* பார்வையற்றோரும் கணினி மூலம் படித்துப் புரிந்து கொள்ள முடியும்
* புலம் பெயர்ந்த தமிழர்கள் பேச மட்டும் தெரிந்தவர்கள் தமிழ் இணைய தளங்களிலும், புத்தகங்களிலும் உள்ளதைப் புரிந்து கொள்ளுதல் முடியும்

ஒளிவகை எழுத்து உணரி (OCR) மற்றும் எழுத்திலிருந்து பேச்சு (TTS)

சனிக்கிழமைக் காலை "தொழில்நுட்பமும் பயன்பாடும் - 3" கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இதைத் தலைமை தாங்கியது 'மயிலை' கல்யாணசுந்தரம். இவர் வேதியியற் துறை முனைவர் என்பது குறிப்பிடத் தக்கது.

முதலாவதாக IIT சென்னையைச் சேர்ந்த அபர்ணா மற்றும் சக்கரவர்த்தி வழங்கிய கட்டுரை. படித்தவர் அபர்ணா. இவர் தமிழ்ப் பத்திரிக்கைகளை முழுவதும் மனித ஈடுபாடு இல்லாமலேயே ஓ.எ.உ செய்வது எப்படி என்பது பற்றித் தாங்கள் செய்த மென்பொருள் பற்றிப் பேசினார்.

இரண்டாவதாகப் பேசிய பேரா. கிருஷ்ணமூர்த்தி தமிழ் எழுத்து உணரி மென்பொருள் 'பொன்விழி' ஐச் செய்து அது விற்பனைக்கும் வந்துள்ளது.

இதை மேற்கொண்டு மற்ற இந்திய மொழிகளுக்கும் இதை நீட்டிப்பதில் உள்ள கடினங்களைப் பற்றிப் பேசினார். சொல்லப்போனால் ஆங்கிலத்துக்கு அடுத்ததாக தமிழில்தான் ஒ.எ.உ செய்வது எளிது என்று தோன்றுகிறது. தெலுங்கு வரிவடிவத்தில் பல அடுக்குகள் உள்ளன (நான்கு அடுக்குகள் வரை உள்ளனவாம் - தமிழில் இரண்டுதான் - புள்ளி). ஹிந்தி வரிவடிவத்தில் பக்கவாட்டில் அடுக்கிக்கொண்டே போகிறது.

தமிழிலேயே நன்றாக அச்சிடப்பட்ட தாள்களை மிகவும் எளிதாக, துல்லியமாக உணர முடியும். ஆனால் எழுத்துக்கள் ஒன்றொடு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தால், அதற்கும் இப்பொழுது விடை கண்டு கொண்டிருப்பதாகச் சொன்னார்.

எழுத்துக்களைப் பிரிப்பது, எழுத்துக்களை அடையாளம் காண்பது, மற்றும் சொற்களை சரியாக்க சொல்-திருத்தி ஆகிய இவை மூன்றும்தான் ஒ.எ.உ க்கு முக்கியத் தேவை என்றார். தனக்கு முன் பேசிய அபர்ணா அவர்களின் ஒ.எ.உ முறை தன்னுடையதிலிருந்து வித்தியாசப்பட்டிருப்பதாகவும், அதிலும் பல நல்லது உண்டென்றும், எல்லா தொழில்நுட்பமும் ஒன்று சேரும்போது முடிவு நல்லதாக இருக்கும் என்றும் சொன்னார்.

சிஃபி தமிழ் - தமிழ் இணையம் 2003 பற்றிய தொகுப்பு

நண்பர் வெங்கடேஷ் சிஃபி டாட் காமிற்காக தமிழ் இணையம் 2003 நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார்.

இவற்றைக் காண இந்த சுட்டிக்குச் செல்லவும்.

மேக்ரோமீடியா அருள் குமரன், சிங்கை மணியம்

சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கும் "மேக்ரோமீடியா" அருள் குமரன் மற்றும் சிங்கை மணியம் ஆகியோரை நேற்று பல இடங்களில் சந்தித்தேன். இன்று அல்லது நாளை படமாக்கிப் போடுகின்றேன்.

அருளின் வலைப்பக்கம் சென்று பார்க்கவும். இவர் மேக்ரோமீடியா நிறுவனத்தாரின் Flash தொழில்நுட்பம் கொண்டு தன்னிறைவு பெற்ற தமிழ் வலைப்பதிவுகள், பக்கங்களைத் தயாரிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறார். இவரிடம் மேற்கொண்டு பேசி இது பற்றி அதிகம் அறிய வேண்டும்.